Monday, January 2, 2012

எல்லா ஆண்டுகளை விட வித்தியாசமாக நடை பெற்ற மகிழ்ச்சி விழா

எல்லா ஆண்டுகளை போல் இல்லாமல் கடந்த ஆண்டுகளை விட மேலும் மேலும் மெருகேறி புது பொலிவுடன் இந்த ஆண்டு கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு நிறைவு விழா இனிதே நடந்தேறியது. 

இந்த ஆண்டு மூன்று நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடந்தன கடைசி நாளில் பொதுக் கூட்டமும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.  30-12-2011 அன்று காலையில் துவங்கிய கைப்பந்து போட்டியானது மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. இந்த போட்டியில் பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன இதில் முதல் பரிசை திருவிதாங்கோடு அணியும் இரண்டாம் பரிசை வெள்ளிகோடு அணியும் பரிசுகளை வென்றன.    31-12-2011காலை ஏழு மணிக்கு கொற்றிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு அணையா விளக்கு ஒட்டம் துவங்கியது. இந்த அணையா விளக்கு ஓட்டத்தை பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் இந்த ஓட்டமானது குமாரபுரம், சித்திரங்கோடு, வேர்கிளம்பி , மேக்காமண்டபம் , முட்டைகாடு வழியாக மைதானத்தை வந்து அடைந்தது. பின்னர் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது இதில் குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. 
  1-1-2012  காலை ஏழு மணிக்கு பெருஞ்சிலம்பு முதல் கொற்றிகோடு வரையிலான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்ட பந்தயம் , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது. 
சிறப்பு போட்டியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டியானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இருந்தது அனைவரும் கைகளை தட்டி வீரர்களை உற்சாக படுத்தியது ரசிக்கும் விதமாக இருந்தது. 
திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்குமான  வடம் இழுத்தல் போட்டி நடைபெற்றது இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதும் விதமாக போட்டி மிகவும் திரில்லாக நடைபெற்றது கடைசியில் திருமணம் ஆனவர்கள் வெற்றி பெற்றார்கள்.   

மாலை  பொதுக்கூட்டமும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் பரிசு வழங்கலும்நடைபெற்றது. இரவு திரை இன்னிசை விருந்தோடு இனிதே முடிந்தது. விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது.   

இந்த  ஆண்டின் சிறப்பு என்னவென்றால் பொதுக் கூட்டத்தின் போது எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு பொது மக்கள் வந்திருந்தார்கள். சிறுவர்கள் அதாவது நாளைய இயக்கத்தின் தூண்கள் மிகவும் சுறு சுறுப்பாக பணியாற்றினார்கள்.

பதிமூன்று ஆண்டுகள் அல்ல நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் பரவலாக பேசினார்கள். சிறந்த நிர்வாகத்தை இளைஞர்களால கொடுக்க முடியும் என்பதற்கு சாட்சி தான் இந்த இயக்கம்.

   

Friday, November 18, 2011

தாகம் மனிதனுக்கு மட்டுமா எனக்கும் தான்

குடிநீர் நல்லி மனிதர்களுக்கு மட்டுமா எங்களுக்கும் தான்

கொற்றிகோடு அருகே குமாரபுரம் பகுதியில் தண்ணீர் தாகத்தை தீர்த்து கொள்ள நினைத்த கன்று குட்டி குடிநீர் நல்லியில் தாகத்தை தீர்த்து கொண்ட போது எடுத்த படம்.

படங்கள் : சுபாஷ்

Sunday, October 9, 2011

குமாரபுரம் பேரூராட்சி தேர்தல் ஒரு பார்வை .

குமாரபுரம் பேரூராட்சி தமிழ் நாட்டின் ஒரு எல்கையான குமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி தக்கலை குலசேகரம் சாலையில் தக்கலையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தாண்டி இதன் எல்லை துவங்குகிறது . ஒரு இதன் எல்லைகளாக முட்டைகாடு, மணலிக்கரை , சித்திரன்கோடு , பண்ணி பொத்தை போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. மற்றும் இந்த பேரூராட்சியில் மிக பெரிய ஊராக கொற்றிகோடு திகழ்கிறது . 


15 வார்டு உறுப்பினர்களை உள்ளடக்கியது குமாரபுரம் பேரூராட்சி. இப்போது நடைபெறுகிற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளர்களாக 6 பேர் களத்தில் உள்ளார்கள் .  15 வார்டுகளுக்கும் சேர்த்து 62 பேர் போட்டியிடுகின்றனர். 

தலைவர் வேட்பாளர்கள்

  1. பிரேம லதா  - காங்கிரஸ் 
  2. பிலோமினாள் - திமுக 
  3. அனிதா ஜெங்கின்ஸ் -அதிமுக 
  4. சாந்தி      - பாஜக 
  5. செல்வம் - சுயேட்சை 
  6. சுனிதா ஜெயக்குமார் - சுயேட்சை   
  வார்டுகளை பொறுத்த வரையிலும் ஒவ்வெரு வார்டிலும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆறிலிருந்து ஏழு பேர் வரை நேரடி போட்டிகளில் உள்ளனர். மதிமுக 2,5,6,7 என 4 வார்டுகளில் முதல் முறையாக போட்டியிடுகிறது. திமுக 3 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 வார்டுகளிலும் , தேமுதிக ஒரு வார்டிலும் , பாஜக 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. 

அதிமுக  14 வார்டுகளிலும் , காங்கிரஸ் 11 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. 19-10-2011 அன்று வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
Friday, October 7, 2011

பெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்

அன்னைக் கன்னித் தமிழ்த்தாயின் நன்னழகார காவிய மலர்களுள் ஓன்று தான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "சிலப்பதிகாரம்". 
சேர, சோழ, பாண்டிய நாடான முத்தமிழ் நாட்டையும் இணைத்து மூன்று வேந்தர்களையும் சேர்த்து பின்னி பிணைத்து இயற்றப்பெற்றது தான் சிலப்பதிகாரம். பெண்ணின் கற்பிற்கு ஓர் மணிமகுடமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. 

சோழ நாட்டிலே பெரும் செல்வந்தர்களான மாசாத்துவான் மகளாக பிறந்த கண்ணகிக்கும் மாங்குட்டுவன் மகனாக பிறந்த கோவலனுக்கும் திருமணம் முடிந்து, சீரும் சிறப்போடும் வாழ்ந்து வரும் நாளில் கலைமகளான மாதவியின் ஆட்டத்தில் மதி மயங்கிய கோவலன் , ஈட்டிய பொருளினை இழக்க, விதி விளையாட , மதி மயக்க , மதுரை சென்று மனையாளின் சிலம்பு விற்க, அவனை கள்வன் என கொலை செய்யப்பட்ட செய்தியறிந்த உத்தமபத்தினி கர்பிற்கரசி  கண்ணகி பாண்டிய நாடு சென்று பாண்டிய மன்னனின் அரசு அவையிலே "தன் கணவன் கள்வன் அல்ல" என வாதிட்டு வாகைசூடி, மதுரை மாநகரையே தீக்குதீனியிட்டு, சேர நாடு சென்று மலையடிவாரத்தில் தன் கணவனின் வரவிற்காய் காத்திருந்து அங்கு புஷ்ப விமானத்தில் வந்த தன் கணவனுடன் செல்கிறாள். 


சேர நாட்டிலே மலையடிவாரத்திலே கண்ணகி புஷ்ப விமானத்தில் சென்ற காட்சியை கண்டு நின்ற மலைக்குறவர்கள் தங்கள் மன்னர் சேரன் செங்குட்டுவனிடம் சென்று தாங்கள் கண்ட காட்சியை தெரிவிக்கிறார்கள். செய்தியறிந்த மன்னர் அவையைக்கூட்டி இதுபற்றி செய்தி சேகரிக்க மன்னரவை புலவர் சீத்தலைசாத்தனார் மூலம் "கண்ணகி ஓர் பத்தினி தெய்வம்" என்ற விவரமறிந்த மன்னன்அவளுக்கு கோயில் கட்டி சிலை வடிக்க சபதமிட்டு, இமயத்தில் கல்லெடுக்க வடநாடு நோக்கி படைஎடுக்கின்றான். வழியில் எதிர்த்த கனக விசய மன்னர்களை பிடித்தடக்கி , இமயம் வரை பரந்திருந்த பின் தென்னகத்திற்கு தள்ளப்பட்ட மீண்டும் இமயத்தை வென்று விட்டான் என்பதற்கு அடையாளமாக வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர்கள் கொடியையும் இமயத்தில் ஓன்று சேர நாட்டி, இமயத்திலே கல்லெடுத்து கனக விசய தலையிலேற்றி , கங்கையிலே நீராட்டி, செரத்திலே சிலைவடித்து, மலையை சார்ந்த குறிஞ்சி நிலத்திலே கண்ணகிக்கு கோயில்கட்டி விழா எடுக்கிறார். 

துறவறம் பூண்டிருந்த சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் சீத்தலை சாத்தனார் மூலம் செய்தியறிந்து அண்ணன் கட்டிய கண்ணகி கோயிலின் சிறப்பு நிலை நிற்கும்படியாகவும், கற்பிற்கரசியின் மகத்துவம் வெளிப்பட்டு இலக்கியத்தில் மங்காது நிலைத்து நின்று பளிச்சிடும்படியும் முத்தமிழ் நாட்டின் சிறப்புகளையும் இயல்புகளையும், பண்பாட்டுகளையும் இணைத்து சிலப்பதிகார காப்பியத்தை படைத்து வைக்கின்றார். 

முத்தமிழ் நாட்டில் ஒன்றான குமரி முதல் மலபார் வரை பரந்திருந்த சேரநாட்டின் தென்பகுதி தான் இன்றைய குமரி மாவட்டம். இக்குமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து உயர்ந்து நிற்கும் வெளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதும், பத்மநாபபுரம் கோட்டையின் முன் வாசலை முத்தமிட்டுச் செல்லும் தக்கலை குலசேகரம் சாலையில் குமாரபுரம் சந்திப்பிலிருந்து கொற்றிகோடு ஊர் வழியாகச் செல்லும் பாதை சென்று சங்கமிக்கும் இடம் தான் பெருஞ்சிலம்பு என்ற பெயர் கொண்ட இடம். 

வேளிமலையிலிருந்து    உற்பத்தியாகி ஓடிவரும், தட்சனக்கோதையாறு என்ற சடையாறு பாய்ந்தோடி வளப்படுத்துவதும், மலைவளத்தால் செழிப்பதும், இலக்கிய சோலையில் வர்ணிக்கப்படும் இயற்கை சூழல் கொண்டதுமான இவ்விடத்தில் வைத்து தான் பாண்டியனிடம் நீதிகேட்டு, மதுரை மாநகரை தீக்குத்தீனியிட்டு சேரநாடு வந்த கண்ணகி, தன் கணவன் கோவலனின் வரவிற்காய் காத்திருந்து புஷ்பவிமானத்தில் வந்த தன் கணவனுடன் செல்கிறாள். இந்நிகழ்ச்சி நடக்காமலிருந்தால், குன்றக் குறவர்கள் தாங்கள் கண்ட காட்சியை தங்கள் மன்னரிடம் சொல்லாமலிருந்தால், சேரமன்னன் இமயம் நோக்கிச் சென்று கல்லெடுத்து சிலைவடிக்கவோ, சேரனின் தம்பி இளங்கோவடிகளால் சிலப்பதிகார காப்பியம் படைக்க வேண்டிய நிலையோ ஏற்பட்டிருக்காது. எனவே கண்ணகியின் கற்பிற்கு பெருமை சேர்க்கும் சிலப்பதிகார காப்பியம் தோன்ற முக்கியகாரணமான மேலே குறிப்பிட்டபடி கண்ணகி தெய்வ நிலை பெற்றுச் சென்ற நிகழ்ச்சி இங்கு நடைபெற்றதால் தான் இவ்விடத்திற்கு பெருஞ்சிலம்பு என்று பெயர் வந்தது. 

மேலும் மன்னனிடம் செய்தி சொன்ன குன்றக்குறவர்கள் (மலைக்குறவர்கள்) இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்குள்ள ஒரு மலைக்கு "குறத்திமலை" என்ற பெயரும், இதன் எல்லைப்பகுதியில் குறவன்குடியிருப்பு என்ற பெயர் கொண்ட ஊரும் உள்ளது. 

மேலும் 1968 இல் தமிழ்க்கடல் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் நடந்த "உலகத்தமிழ் மாநாட்டிலே" நடந்த ஆய்வறிக்கையின் போது, சிலப்பதிகாரத்திலே வரும் சேரமன்னன் கட்டிய முதல் கண்ணகிகோயில், குமரிமாவட்டத்தின் மலைப்பகுதியிலே தான் காணப்படும்.  அக்கோயிலை கண்டு பிடிக்க ஆய்வாளர்கள் முயற்சிக்க வேண்டும். என்று கேட்டு கொண்டார். ஆனால் அவ்வாராய்ச்சி தொடராததும், முதல் கண்ணகியின் கோயில் கண்டு பிடிக்காததும் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு தொய்வாக உள்ளது.
அன்றைய சேர நாடான இன்றைய கேரளத்தில் கண்ணகி கோயில் இருந்தாலும், சேரமன்னன் கட்டிய முதல் கண்ணகி கோயில் எங்கிருக்கும் என்பது சிந்தனக்குரியதாக உள்ளது. ஏனென்றால் இமயத்தில் கல்லெடுத்து கனக,விசயர் தலையிலே ஏற்றி வந்த கல்லில் சேரன் சிலை வடித்தார் என்றால், ஒரு ஆள் சுமக்கும் அளவுள்ள கல்லில் தான் முதல்கண்ணகி சிலை செதுக்கியிருக்க வேண்டும். ஆள் உயர கல்லில் சிலை வடித்திருக்கமாட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவும் கண்ணகி காப்பியம் அமைய காரணமாயிருந்த இடத்தின் பக்கத்தில் தான் முதல்கோயில் மன்னர் கட்டியிருக்க வேண்டும் என்பதும் சிந்தனைக்குரியது. வெளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது தான் பெருஞ்சிலம்பு.
இந்த வேளிமலையில் அழிந்தும் அழியாத நிலையில் பல கோயில்கள் இருந்தும் சிதறுண்ட நிலையில் கண்ணகிகோயில் உள்ளதாக வாய்வழிச் செய்திகள் வந்து கொண்டிருந்தும், சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலை கண்டு பிடிக்காததும் ஆய்வு செய்யாததும், ஆய்வாளர்களுக்கு இது ஒரு தொய்வேயாகும்.  

-ஆசிரியர் கொற்றை. ஈ.ஞான தாஸ்
Monday, May 9, 2011

மேல்நிலை தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சாதித்த மனிலிக்கரை மாணவர்கள்

தமிழகம் முழுவதும் மேல்நிலை பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது. குமரி மாவட்ட அளவில் கொற்றிகோடு அருகே மணலிக்கரையில் அமைந்துள்ள புனித மரிய கொரற்றி மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்கள். 

மாநில அளவில் தாவரவியல்(Botany) பாடத்தில் மாணவி றிபானா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை இதே பள்ளி மாணவர்கள் தட்டி சென்றுள்ளனர். முதலிடத்தை ஜோஸ் ரிஜான் 1180 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதே பள்ளியை சார்ந்த அபினாஸ் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 

ஜோஸ் ரிஜான் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிட தக்கது. 

மாவட்ட மாநில அளவில் சாதனைகள் படைத்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.      
Friday, April 22, 2011

கொற்றிகோட்டில் ஐக்கிய கிறிஸ்தவ சிலுவை பாதை பவனி

இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இயேசுவை சிலுவையில் அறைந்த நாளை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவர்கள்  சிலுவையை சுமந்து நினைவு கூறி வருகின்றனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இயேசு சிலுவையை சுமந்து கல்வராயன் மலைக்கு சென்ற போது நடைபெற்ற ஒவ்வெரு நிகழ்வுகளையும் நினைத்து அனுசரித்து வருவார்கள்.

கொற்றிகோட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் தென்னிந்திய திருச்சபையினரும் சேர்ந்து ஐக்கிய சிலுவை பாதை பவனியாக நடத்தி வருகின்றனர். இதில் புனித மிக்கேல் அதி தூதர் ஆலயம், கொற்றிகோடு தென்னிந்திய திருச்சபை, சோலாபுறம் புனித பத்தாம் பத்தி நாதர் ஆலயம், பட்டன் விளை தென்னிந்திய திருச்சபை ஆகிய திருச்சபைகள் இணைந்து இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவு கூறுகின்றனர்.

எல்லா ஆண்டும் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறும் மும்மணி தியானம் சிலுவை பாதை பவனிக்காக கொற்றிகோடு திருச்சபையில் இன்று காலை நடத்த பட்டது. இதில் சிலுவையில் இயேசு தொங்கிய போது பேசிய ஏழு வாரத்தைகள் பற்றி ஏழு பேர் செய்தி கொடுத்தார்கள்.


அனைத்து திருச்சபை மக்களும் மிக்கேல் நகர்(பனன்காலை) புனித மிக்கேல் அதி தூதர் ஆலையத்தில் கூடி அங்கிருந்து முட்டைகாடு சென்று குமாரபுரம் வந்து இடையிடையே ஒவ்வெரு நிலைகளிலும் அந்த நிலை குறித்த செய்தியும் தியானமும் செய்யப்பட்டு கொற்றிகோடு காவல் நிலையம் சென்று மீண்டும் குமாரபுரம் வழியாக கொற்றிகோடு ஆலயம் முன்னிருக்கும் 9 வது நிலையை முடித்து சொலாப்புறம் புனித பத்தாம் பத்தி நாதர் ஆலயத்தில் நிறைவு செய்தனர்.



இயேசுவின் பாடு மரணம் குறித்த தியான பாடல்களை பாடிய வண்ணம் பவனி சென்று கொண்டிருக்கிறது. அமைதியும் ஒருவித சோர்வும் தியாகமும் வெளிகாட்டும் விதமாக பவனியில் பங்கேற்றவர்கள் இருந்தார்கள். கடந்த வாரம் நடத்திய குருத்தோலை பவனியிலிருந்தும் இது மிகவும் வித்தியாசத்தொடு காட்சியளித்தது.


ஒன்பது முறை விழுந்தவனை பார்த்து பூமி சொன்னதாம் நீ எட்டு முறை எழுந்தவன் தானே என்று” பவனியின் போது நினைவூட்ட பட்ட இந்த வரிகள் தன்னம்பிக்கையையும் தோல்வி என்பது ஒரு வித வெற்றி தான் என்பதை நினைவூட்டியது. 

Updates Via E-Mail