Friday, October 7, 2011

பெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்

அன்னைக் கன்னித் தமிழ்த்தாயின் நன்னழகார காவிய மலர்களுள் ஓன்று தான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "சிலப்பதிகாரம்". 
சேர, சோழ, பாண்டிய நாடான முத்தமிழ் நாட்டையும் இணைத்து மூன்று வேந்தர்களையும் சேர்த்து பின்னி பிணைத்து இயற்றப்பெற்றது தான் சிலப்பதிகாரம். பெண்ணின் கற்பிற்கு ஓர் மணிமகுடமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. 

சோழ நாட்டிலே பெரும் செல்வந்தர்களான மாசாத்துவான் மகளாக பிறந்த கண்ணகிக்கும் மாங்குட்டுவன் மகனாக பிறந்த கோவலனுக்கும் திருமணம் முடிந்து, சீரும் சிறப்போடும் வாழ்ந்து வரும் நாளில் கலைமகளான மாதவியின் ஆட்டத்தில் மதி மயங்கிய கோவலன் , ஈட்டிய பொருளினை இழக்க, விதி விளையாட , மதி மயக்க , மதுரை சென்று மனையாளின் சிலம்பு விற்க, அவனை கள்வன் என கொலை செய்யப்பட்ட செய்தியறிந்த உத்தமபத்தினி கர்பிற்கரசி  கண்ணகி பாண்டிய நாடு சென்று பாண்டிய மன்னனின் அரசு அவையிலே "தன் கணவன் கள்வன் அல்ல" என வாதிட்டு வாகைசூடி, மதுரை மாநகரையே தீக்குதீனியிட்டு, சேர நாடு சென்று மலையடிவாரத்தில் தன் கணவனின் வரவிற்காய் காத்திருந்து அங்கு புஷ்ப விமானத்தில் வந்த தன் கணவனுடன் செல்கிறாள். 


சேர நாட்டிலே மலையடிவாரத்திலே கண்ணகி புஷ்ப விமானத்தில் சென்ற காட்சியை கண்டு நின்ற மலைக்குறவர்கள் தங்கள் மன்னர் சேரன் செங்குட்டுவனிடம் சென்று தாங்கள் கண்ட காட்சியை தெரிவிக்கிறார்கள். செய்தியறிந்த மன்னர் அவையைக்கூட்டி இதுபற்றி செய்தி சேகரிக்க மன்னரவை புலவர் சீத்தலைசாத்தனார் மூலம் "கண்ணகி ஓர் பத்தினி தெய்வம்" என்ற விவரமறிந்த மன்னன்அவளுக்கு கோயில் கட்டி சிலை வடிக்க சபதமிட்டு, இமயத்தில் கல்லெடுக்க வடநாடு நோக்கி படைஎடுக்கின்றான். வழியில் எதிர்த்த கனக விசய மன்னர்களை பிடித்தடக்கி , இமயம் வரை பரந்திருந்த பின் தென்னகத்திற்கு தள்ளப்பட்ட மீண்டும் இமயத்தை வென்று விட்டான் என்பதற்கு அடையாளமாக வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர்கள் கொடியையும் இமயத்தில் ஓன்று சேர நாட்டி, இமயத்திலே கல்லெடுத்து கனக விசய தலையிலேற்றி , கங்கையிலே நீராட்டி, செரத்திலே சிலைவடித்து, மலையை சார்ந்த குறிஞ்சி நிலத்திலே கண்ணகிக்கு கோயில்கட்டி விழா எடுக்கிறார். 

துறவறம் பூண்டிருந்த சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் சீத்தலை சாத்தனார் மூலம் செய்தியறிந்து அண்ணன் கட்டிய கண்ணகி கோயிலின் சிறப்பு நிலை நிற்கும்படியாகவும், கற்பிற்கரசியின் மகத்துவம் வெளிப்பட்டு இலக்கியத்தில் மங்காது நிலைத்து நின்று பளிச்சிடும்படியும் முத்தமிழ் நாட்டின் சிறப்புகளையும் இயல்புகளையும், பண்பாட்டுகளையும் இணைத்து சிலப்பதிகார காப்பியத்தை படைத்து வைக்கின்றார். 

முத்தமிழ் நாட்டில் ஒன்றான குமரி முதல் மலபார் வரை பரந்திருந்த சேரநாட்டின் தென்பகுதி தான் இன்றைய குமரி மாவட்டம். இக்குமரி மாவட்டத்தின் மையப்பகுதியில் மாவட்டத்தின் இதயம் போன்று அமைந்து உயர்ந்து நிற்கும் வெளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதும், பத்மநாபபுரம் கோட்டையின் முன் வாசலை முத்தமிட்டுச் செல்லும் தக்கலை குலசேகரம் சாலையில் குமாரபுரம் சந்திப்பிலிருந்து கொற்றிகோடு ஊர் வழியாகச் செல்லும் பாதை சென்று சங்கமிக்கும் இடம் தான் பெருஞ்சிலம்பு என்ற பெயர் கொண்ட இடம். 

வேளிமலையிலிருந்து    உற்பத்தியாகி ஓடிவரும், தட்சனக்கோதையாறு என்ற சடையாறு பாய்ந்தோடி வளப்படுத்துவதும், மலைவளத்தால் செழிப்பதும், இலக்கிய சோலையில் வர்ணிக்கப்படும் இயற்கை சூழல் கொண்டதுமான இவ்விடத்தில் வைத்து தான் பாண்டியனிடம் நீதிகேட்டு, மதுரை மாநகரை தீக்குத்தீனியிட்டு சேரநாடு வந்த கண்ணகி, தன் கணவன் கோவலனின் வரவிற்காய் காத்திருந்து புஷ்பவிமானத்தில் வந்த தன் கணவனுடன் செல்கிறாள். இந்நிகழ்ச்சி நடக்காமலிருந்தால், குன்றக் குறவர்கள் தாங்கள் கண்ட காட்சியை தங்கள் மன்னரிடம் சொல்லாமலிருந்தால், சேரமன்னன் இமயம் நோக்கிச் சென்று கல்லெடுத்து சிலைவடிக்கவோ, சேரனின் தம்பி இளங்கோவடிகளால் சிலப்பதிகார காப்பியம் படைக்க வேண்டிய நிலையோ ஏற்பட்டிருக்காது. எனவே கண்ணகியின் கற்பிற்கு பெருமை சேர்க்கும் சிலப்பதிகார காப்பியம் தோன்ற முக்கியகாரணமான மேலே குறிப்பிட்டபடி கண்ணகி தெய்வ நிலை பெற்றுச் சென்ற நிகழ்ச்சி இங்கு நடைபெற்றதால் தான் இவ்விடத்திற்கு பெருஞ்சிலம்பு என்று பெயர் வந்தது. 

மேலும் மன்னனிடம் செய்தி சொன்ன குன்றக்குறவர்கள் (மலைக்குறவர்கள்) இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்குள்ள ஒரு மலைக்கு "குறத்திமலை" என்ற பெயரும், இதன் எல்லைப்பகுதியில் குறவன்குடியிருப்பு என்ற பெயர் கொண்ட ஊரும் உள்ளது. 

மேலும் 1968 இல் தமிழ்க்கடல் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் நடந்த "உலகத்தமிழ் மாநாட்டிலே" நடந்த ஆய்வறிக்கையின் போது, சிலப்பதிகாரத்திலே வரும் சேரமன்னன் கட்டிய முதல் கண்ணகிகோயில், குமரிமாவட்டத்தின் மலைப்பகுதியிலே தான் காணப்படும்.  அக்கோயிலை கண்டு பிடிக்க ஆய்வாளர்கள் முயற்சிக்க வேண்டும். என்று கேட்டு கொண்டார். ஆனால் அவ்வாராய்ச்சி தொடராததும், முதல் கண்ணகியின் கோயில் கண்டு பிடிக்காததும் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு தொய்வாக உள்ளது.
அன்றைய சேர நாடான இன்றைய கேரளத்தில் கண்ணகி கோயில் இருந்தாலும், சேரமன்னன் கட்டிய முதல் கண்ணகி கோயில் எங்கிருக்கும் என்பது சிந்தனக்குரியதாக உள்ளது. ஏனென்றால் இமயத்தில் கல்லெடுத்து கனக,விசயர் தலையிலே ஏற்றி வந்த கல்லில் சேரன் சிலை வடித்தார் என்றால், ஒரு ஆள் சுமக்கும் அளவுள்ள கல்லில் தான் முதல்கண்ணகி சிலை செதுக்கியிருக்க வேண்டும். ஆள் உயர கல்லில் சிலை வடித்திருக்கமாட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவும் கண்ணகி காப்பியம் அமைய காரணமாயிருந்த இடத்தின் பக்கத்தில் தான் முதல்கோயில் மன்னர் கட்டியிருக்க வேண்டும் என்பதும் சிந்தனைக்குரியது. வெளிமலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பது தான் பெருஞ்சிலம்பு.
இந்த வேளிமலையில் அழிந்தும் அழியாத நிலையில் பல கோயில்கள் இருந்தும் சிதறுண்ட நிலையில் கண்ணகிகோயில் உள்ளதாக வாய்வழிச் செய்திகள் வந்து கொண்டிருந்தும், சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலை கண்டு பிடிக்காததும் ஆய்வு செய்யாததும், ஆய்வாளர்களுக்கு இது ஒரு தொய்வேயாகும்.  

-ஆசிரியர் கொற்றை. ஈ.ஞான தாஸ்

7 comments:

Rajan said...

Nice article

saravananfilm said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

Hot tamil actresses

Robin said...

Thanks for the info.

Kotticode said...

saravananfilm said...

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

/////////////

எங்கள் பகுதியின் பிரபல எழுத்தாளர் கொற்றை ஈ ஞானதாஸ் எழுதியது . நன்றி

Selvin said...

Good information,Thank you

JR said...

Nice Article.....
Valuable Info.

Anonymous said...

admin kindly send ur test mail to godsonshalom@gmail.com

Post a Comment

Updates Via E-Mail