Wednesday, June 12, 2019

கொற்றிகோட்டில் சிலம்ப பயிற்சி வகுப்புகள்

தமிழர்களின் வீர விளையாட்டு கலையான சிலம்பம் பயிற்சிகள் கொற்றிகோட்டின் தலைமுறைகள் அறிந்து கொள்ள வசதியாக கிளப் சார்பாக பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது.  

16-06-2019 ஞாயிற்றுக்கிழமை துவங்குகிற பயிற்சி வகுப்புகள் ஞாயிறு தோறும் மாலை 4 மணிக்கு நடைபெறும்.  இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் கிளப் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம். 

கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு பண்ணி பொத்தை

கொற்றிகோடு பகுதியை சுற்றிலும் மலைகள் சூழ்ந்து காணப்படும்.  இதில் உயரமான மலையாக வேளிமலை திகழ்கிறது.  

கொற்றிகோட்டை அடுத்து பெருஞ்சிலம்பு அதை தொடர்ந்து பண்ணி பொத்தை என்ற இடம் உள்ளது.  இது ஒரு மலையும் மலை சார்ந்த இடமாக காணப்படுகிறது.  இந்த பகுதி மலை என்பதை விட பொத்தை என்று சொல்லும் வண்ணம் சிறு சிறு மலை முகடுகள் காணப்படுகின்றன.  

பொதுவாகவே இந்த பகுதியில் உள்ள பெயர்கள் அனைத்துமே காரண பெயராகவே காணப் படுகிறது.  பண்ணி பொத்தைக்கு எதாவது காரண பெயர் இருக்கிறதா என்று இலக்கியங்களில் தேடிய போது ஒரு காலத்தில் பண்ணி என்ற ஒரு அரசன் வாழ்ந்து வந்திருக்கிறான். அந்த அரசன் மலை பகுதியை தன் நாடாக கொண்டவன் என்று குறிக்க பட்டுள்ளது.  

இந்த வரலாறை பார்க்கும் போது அந்த அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பண்ணி பொத்தை இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  

மொத்தத்தில் பண்ணி பொத்தை இயற்கையின் வரம் என்று தான் சொல்ல வேண்டும்..  

பட உதவி : ஜெனிபர் 
Thursday, May 30, 2019

Who is Nesamani - Marshal Nesamani - மார்ஷல் நேசமணி

ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு நேசமணியை பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக திகழ்கிறது கன்னியாகுமரி. ஆனால் இந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்தது வெறும் சாதாரணமாக நடைபெறவில்லை. அதற்கு பின் பல போராட்ட சம்பவங்களுக்கு உண்டு. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் விளவங்கோடு வட்டத்தில் கடந்த 1895-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ஆம் தேதி பிறந்தவர் நேசமணி. வழக்கறிஞரான இவர் குமரி தந்தை எனவும் மக்களால் அறியப்படுகிறார். குமரி தந்தை என நேசமணி அறியப்படுவதற்கு காரணமும் உண்டு.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். அத்துடன் அங்கு தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான போராட்டங்கள் வெடித்த நிலையில் அதனை முன்நின்று நடத்தியவர்களின் பெரும் பங்கிற்குரியவர் நேசமணி. இதனால்தான் மார்ஷல் நேசமணி என்று அம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இதனையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த நேசமணி உள்ளிட்டோர் 1954-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டமும் வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் நேசமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

அதன்பின் நடைபெற்ற பலகட்ட போராட்டங்களுக்கு பின் 1956-ஆம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 9 தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்ப்பட்டது. இதில் செங்கோட்டை பகுதி மட்டும் நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது. நேசமணி உள்ளிட்டோரின் போராட்டம் காரணமாகத் தான், தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது. அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ., எம்.பி உள்ளிட்ட பதவிகளையும் வகித்த நேசமணி, தனது 72-வது வயதில் 1968-ஆம் ஆண்டு மறைந்தார்.
Tuesday, May 7, 2019

இயற்கை எழில் நிறைந்த ஏழானை பொத்தை உளி அருவி

கொற்றிகோடு அருகே ஏழானை பொத்தை என்ற மலை பகுதி காணப் படுகிறது. 

 இது ஏழு யானைகள் கால்லாகி நின்றது போல் காட்சி தரும் அதனால் இது ஏழானை பொத்தை என்று அழைக்க பட்டது. 

ஏழானை பொத்தையின் பின்புறம் அமைந்துள்ள நீர் வீழ்ச்சி தான் உளி அருவி.  இது மழை காலங்களில் கண்ணுக்கு இனிமையான காட்சி தரும்.  இங்கு வெளியூரிலிருந்து பலர் வந்து பார்த்து குளித்து செல்கின்றனர். 

தக்கலையிலிருந்து குலசேகரம் சாலையில் குமாரபுரம் வந்து பெருஞ்சிலம்பு சாலை வழியாக வந்தால் உளி அருவியை அடையலாம்..  

சாதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் கால்டுவெல்


திருநெல்வேலி,:  தமிழகத்தில் நிலவிய சாதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தமிழறிஞர் கால்டுவெல் குரல் கொடுத்தார் என பாளை.யில் நடந்த கருத்தரங்கில் பாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்தார்.    நெல்லை பல்கலை., டிடிடிஏ., நெல்லை மண்டலம், அவ்வை நுண்கலைக் கல்லுாரி சார்பில் தமிழறிஞர் பேராயர் கால் டுவெல் நினைவு தின கருத்தரங்கம் பாளை.யில் நடந்தது. 


கருத்தரங்கிற்கு நெல்லை அவ்வை நுண்கலைக் கல்லுாரி  தாளாளர் ஓவியர் சந்துரு தலைமை வகித்தார். நெல்லை பல்கலை., வரலாற்று துறை தலைவர் ராமசுப்பிரமணியன், சாராள் தக்கர் கல்லுாரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், ஜான்ஸ் கல்லுாரி செயலர் ஜார்ஜ்கோசல் முன்னிலை வகித்தனர். டிடிடிஏ., தொடர்பு துறை இயக்குநர் கிப்சன் ஜான்தாஸ் வரவேற்றார். எழுத்தாளர் சேவியர் அறிமுகவுரை ஆற்றினார். 

கருத்தரங்கை நெல்லை பல்கலை., துணை வேந்தர் பாஸ்கர் துவக்கி வைத்து பேசுகையில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள்  தமிழில் பேசுவது குறைந்து வருகிறது. தமிழ் மொழி சிறப்பையும், தொன்மையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமது கலாச்சாரம், பண்பாடு, இலக்கியத்தை தமிழ் மொழியில் கற்பதோடு, அதன் சிறப்பை பிற மொழி பேசுபவர் களிடம் எடுத்துக் கூற வேண்டும். கால்டு வெல் தியாக உணர்வோடு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார் ’என்றார். 

சாமிதோப்பு அய்யாவழி சபை பாலபிரஜாபதி அடிகளார் பேசுகையில்,  உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் தாய் மொழியில் கற்கின்றனர். நம் நாட்டில் மட்டும் அந்த நிலையில்லை. இந்த நிலை மாற வேண்டும். நெல்லை பல்கலை., கால்டுவெல் போன்ற மிழறிஞர்களுக்கு விழா எடுத்து ,அவர்களின் சமூக பணிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக செய்து வருவதால் ஜீவன் உள்ள பல்கலை.யாக திகழுகிறது. 

கேரள மாநி லம் திருவனந்தபுரத்தில் கால்டுவெல் வசித்த வீடு சேதமடைந்த நிலையில் உள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும் என கேரள முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதுபோல் தமிழக அரசு, மத்திய அரசும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கால்டுவெல் குரல் கொடுத்தார். தமிழும், தமிழ் மக்களும் வாழ தனது கடைசிநநாள் வரை கால்டுவெல் பாடுபட்டார் ’என்றார். 

 கருத்தரங்கில்  எம்.பி., விஜிலா சத்தியானந்த், பாளை., கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ், டிடிடிஏ., நெல்லை திருமண்டல உப தலைவர் பில்லி, குருத்துவ செயலர் ஸ்டீபன் செல்வின்ராஜ், லே செயலாளர் வேதநாயகம், பொருளார் தேவதாஸ் ஞானராஜ் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.  கருத்தரங்கில்நெல்லை பல்கலை., பதிவாளர் ஜான் டி.பிரிட்டோ  ‘டாக்டர். கால்டுவெல் வாழ்வும் பணியும் என்ற நுாலை வெளியிட்டார். 

நிகழ்ச்சியில் சாராள் தக்கர் கல்லுாரி பேராசிரியை தங்கம், பாளை., ஜான்ஸ் கல்லுாரி முதல்வர் ஜான்கென்னடி வேதநாதன் உட்பட பலர் கருத்துரை வழங்கினர்.  கருத்தரங்கில்  பெங்களூரு இந்திய தொல்லியல் துறை ஆணையர் அறவாழி மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சேகர குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Monday, May 6, 2019

பெருஞ்சிலம்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

பாரதியார் விளையாட்டு கழகத்தின் 22 வது ஆண்டு விழா நிகழ்வுகள் நேற்று பெருஞ்சிலம்பில் துவங்கியது. 

குமாரபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருஞ்சிலம்பு பகுதியில் பாரதியார் விளையாட்டு  கழகத்தின்  சார்பில் மாவட்ட     அளவிலான மின்னொளி  கபடி போட்டி    நடை பெற்றது. இதில் குமரி மாவட்டத்தில்   உள்ள பல்வேறு அணிகள்   கலந்து கொண்டன . 


Updates Via E-Mail